தமிழக அரசை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் குட்கா ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் நடந்துள்ள ஊழல்கள் குறித்து தமிழக கவர்னர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஊழல் புகாரில் சிக்கியுள்ள தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் கீரை விசுவநாதன், ராஜேந்திரன், நகர செயலாளர் தங்கராஜ், வக்கீல் அணி மாவட்ட நிர்வாகி மணி, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், கோபால், செல்வராஜ், அன்பழகன், சிவப்பிரகாசம், செங்கண்ணன், சித்தார்த்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com