ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் தி.மு.க. கோரிக்கை

ஆர்.கே.நகரில் தொகுதி முழுவதும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் தி.மு.க. கோரிக்கை
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனுவை அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் முதல்அமைச்சர் கலந்து கொண்ட கூட்டம் கேப்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் மூன்று கவுண்ட்டர்கள் போட்டு ரூ.500 பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதையெல்லாம் போலீஸ் அதிகாரிகள் வேடிக்கைதான் பார்த்தார்கள்.

எந்த காரணத்திற்கு முன்பு தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அவை மீண்டும் நடக்கின்றன. தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன. காவல்துறையும், மாநகராட்சியும் தேர்தல் கமிஷனின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதில்லை.

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களை நீக்கும்படி கூறினோம். அதை இன்னும் நீக்கவில்லை. சி.சி.டி.வி கேமராக்களை தொகுதி முழுவதும் வைக்கவேண்டும்.

பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே தேர்தல் முறையாக நடைபெறும். ஆளும் கட்சியின் இரண்டு அணிகளும் ஒரே கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு வருவதால், யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை கண்டறிய கடினமாக உள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடர்பான பட்டியல்களை (செக் லிஸ்ட்) கேட்டும் இன்னும் தரவில்லை. தேர்தல் பணிமனைக்கும் அனுமதி கிடைக்கவில்லை. அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com