

மணப்பாறை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும் சென்னை தலைமை செயலகத்தில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். அதேபோல மணப்பாறை பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் பன்னபட்டி என்.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகரச் செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 47 பேரை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திருச்சி-அரியலூர் நெடுஞ்சாலையில் லால்குடி சிறுதையூர் நான்கு ரோட்டில் சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வன் (வடக்கு), ரவிச்சந்திரன் (தெற்கு), மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் வைரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை யடுத்து லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்தனர்.
திருவெறும்பூர் கடைவீதியில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, குண்டூர் மாரியப்பன், பகுதி செயலாளர் ஓ.நீலமேகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஸ்ரீரங்கத்தில், பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் ராஜகோபுரம் அருகில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
தொட்டியம் வாணப்பட்டறை கார்னரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.