

தர்மபுரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுத்ததற்கும், சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொருளாளர் தர்மச்செல்வன், நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், குமரவேல், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், தி.க. நிர்வாகிகள் ஊமை ஜெயராமன், தமிழ்செல்வி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலைமறியலை கைவிட மறுத்ததால் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் தலைமையில் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சி.செல்வராஜி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.செல்வராஜ், பேரூர் செயலாளர் வீரமணி முன்னிலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. சாலைமறியலில் ஈடுபட்ட 28 தி.மு.க.வினரை பென்னாகரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். காரிமங்கலம், அரூர், , கிருஷ்ணாபுரம், பாப்பாரபட்டி, பாலக்கோடு உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 191 பேரை போலீசார் கைது செய்தனர்.