கட்சி கொடிகளை அகற்றியதை கண்டித்து ஓமலூரில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 35 பேர் மீது வழக்கு

ஓமலூரில் கட்சி கொடிகளை அகற்றியதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்; ஓமலூரில் தி.மு.க.வினர் சாலை மறியல்
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்; ஓமலூரில் தி.மு.க.வினர் சாலை மறியல்
Published on

கட்சி கொடிகள் அகற்றம்

ஓமலூரில் கடந்த 14-ந்தேதி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதற்காக ஓமலூர் பஸ்நிலையம் மேட்டூர் ரோடு, தர்மபுரி மெயின்ரொடு ஆகிய இடங்களில் தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. இதனிடையே அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் செல்லும் வழியில் இருந்த தி.மு.க. கொடிகளை ஓமலூர் டெம்போ ஸ்டேண்டில் உள்ள டிரைவர்களை வைத்து அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து ஓமலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், தலைமையில் தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மதியம் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்த தகவலை அறிந்த தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்தார். இதனையடுத்து திருமண மண்டபத்தில் இருந்து தி.மு.க.வினர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எம்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்று பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன உரை

ஆர்ப்பாட்டத்துக்கு ஓமலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், நாசர்கான், முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாவட்ட கவுன்சிலர் அழகிரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருமைசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் குமரன் மணி, ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

35 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் ஓமலூர் பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி சாலை மறியல் செய்ததாக ஓமலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் தங்கராஜ் உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com