குலுக்கல் முறையில் ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தி.மு.க. கைப்பற்றியது. ஒன்றிய அலுவலகம் முன்பு போலீசார்- தி.மு.க.வினர் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது
குலுக்கல் முறையில் ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
Published on

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 31 ஒன்றிய வார்டுகளில் தி.மு.க.-15 , அ.தி.மு.க.-10, காங்கிரஸ், அ.ம.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா, ம.தி.மு.க. ஆகியவை தலா 1 இடத்தையும், சுயேச்சை ஒருவர் ஒரு இடத்தையும் பிடித்தனர்.

இதில் 13-வது வார்டில் வெற்றி பெற்ற சிலம்பரசன், 17-வது வார்டில் வெற்றி பெற்ற அமுதா, 24-வது வார்டில் வெற்றி பெற்ற சூரியகலா ஆகிய 3 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இவர்கள் 3 பேரையும் மறைமுக தேர்தலில் பங்கேற்க கோர்ட்டு தடை விதித்தது. இதனால் இவர்கள் 3 பேருக்கும் நேற்றைய தேர்தலில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

சமமான வாக்குகள்

மீதி உள்ள 28 ஒன்றியக்குழு உறுப்பினர்களை கொண்டு ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் தேர்தலை நடத்தினார்.

இதில் அ.தி.மு.க சார்பில் 25-வது வார்டு ஒன்றியக்கு உறுப்பினர் கலையரசி தனபால், தி.மு.க சார்பில் 16-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பார்வதி சிவசங்கர் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கலையரசி தனபால் மற்றும் தி.மு.க வேட்பாளர் பார்வதி சிவசங்கர் ஆகிய இருவரும் தலா 14 வாக்குகளை சமமாக பெற்றனர்.

குலுக்கல் முறையில் தேர்வு

இதனால் குலுக்கல் முறையில் ஒன்றியக்குழு தலைவர் தேர்வு நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் பார்வதி சிவசங்கர் ஒன்றியக்குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் அறிவித்தார்.

முன்னதாக தேர்தலில் பங்கேற்க கோர்ட்டு தடைவிதித்த 3 தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர்களையும் போலீசார் தேர்தல் நடைபெற்ற ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு- முள்ளு உருவானது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

துணைத்தலைவர்

மாலையில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தி.மு.க உள்ளிட்ட 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

துணைத்தலைவர் பதவிக்கு 11-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கி.சுந்தர், 22-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ஆர்.கண்ணன் ஆகிய இருவரும் மனுதாக்கல் செய்தனர். இதில் கண்ணன் 10 வாக்குகளையும், சுந்தர் 5 வாக்குகளையும் பெற்றனர். 1 வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 வாக்குகளை பெற்ற ஆர்.கண்ணன் துணைத்தலைவராக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com