தி.மு.க. பிரமுகரை கொல்ல முயற்சி: மர்ம கும்பலை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூர் அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல முயன்ற மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. பிரமுகரை கொல்ல முயற்சி: மர்ம கும்பலை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 61). இவர் அரிச்சந்திரபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரை கொலை செய்ய கடந்த 8-ந் தேதி இரவு கூத்தாநல்லூர் அருகே உள்ள காடுவெட்டி என்ற இடத்தில் 8 பேர் கொண்ட மர்மகும்பல் காரை மறித்து தாக்க முயன்றனர். ஆனால் அந்த காரில் செல்வம் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கார் டிரைவர் வடவேற்குடி, நடுத்தெருவை சேர்ந்த லோகேஸ்வரன்(29) மற்றும் காரில் இருந்த மன்னார்குடி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் (37) ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஸ்வரன் மற்றும் பாஸ்கரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம கும்பலை கைது செய்யக்கோரி கூத்தாநல்லூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, முன்னாள் எம்.பி. விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டு செல்வத்தை கொலை செய்ய வந்த கும்பலை கைது செய்யக்கோரி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com