மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது

மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளரை கொலை செய்த அ.தி.மு.க. நிர்வாகி மற்றும் கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்கள் என 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது
Published on

தி.மு.க. வட்ட செயலாளர் கொலை

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவர், சென்னை மாநகராட்சி 188-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி, மாநகராட்சி 188-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார்.

செல்வம், கடந்த 1-ந் தேதி இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் அலுவலகத்தில் இருந்து 10 மீட்டர் தூரம் சாலை முனைக்கு நடந்து சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் செல்வத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

இது தொடர்பாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் உதவி கமிஷனர்கள் பிராங் டி ரூபன், அமீர் அகமது உள்ளிட்டோர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கூலிப்படையினர் மூலம் செல்வத்தை கொலை செய்தது தெரியவந்தது.

அ.தி.மு.க. நிர்வாகி சிக்கினார்

இந்த நிலையில் போலீசாரின் சந்தேகப்பார்வையில் இருந்துவந்த தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி ராதாகிருஷ்ணன்(42), சென்னையில் இருந்து காரில் தப்பிச் செல்வது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் இதுபற்றி திருச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் மூலம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ராதாகிருஷ்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து செல்வம் கொலையில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

கூலிப்படை கைது

இதற்கிடையில் செல்வத்தை கொலை செய்த வடசென்னையை சேர்ந்த கூலிப்படை கும்பல் விழுப்புரம் அருகே வக்கீல்களுடன் காரில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மடிப்பாக்கம் தனிப்படை போலீசாரும், விழுப்புரம் மாவட்ட போலீசாரும் இணைந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படை கும்பலை மடக்கி பிடித்தனர்.

இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த நவீன் (21), புவனேஸ்வர் (21), வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் (21), அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்த விக்னேஷ் (21), திருவள்ளூர் விஜயநல்லூரை சேர்ந்த கிஷோர் குமார் (21) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலைக்கான காரணம் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com