நிதித்துறை செயலாளர் பற்றி குறை சொல்ல வேண்டாம், கவர்னர் கிரண்பெடி கருத்து

நிதித்துறை செயலாளர் பற்றி குறை சொல்ல வேண்டாம் என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.
நிதித்துறை செயலாளர் பற்றி குறை சொல்ல வேண்டாம், கவர்னர் கிரண்பெடி கருத்து
Published on

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், அமைச்சரவைக்கும் இடையேயான மோதலை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். சமீபத்தில் இலவச அரிசி, பொங்கல் பொருட்கள் வழங்குவது தொடர்பான கோப்புகளும் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்தன.

இந்தநிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து இலவச அரிசி, பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். மேலும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவதற்கான கோப்பிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட அமைச்சர் கந்தசாமி, கவர்னரும், தாங்களும் ஒருவரையொருவர் விமர்சிப்பதில்லை என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்தார். இருந்தபோதிலும் நிதித்துறை செயலாளரான கந்தவேலுவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் கந்தசாமி, மண்ணின் மைந்தரான அவர் புதுவை வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் கந்தசாமியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூக நலத்துறை அமைச்சரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். அவர்களின் செயல்பாட்டில் குறை காணப்பட்டால் சட்டத்தை மதிக்கவில்லை எனவும், அதற்கான விளக்கத்தை தரும்படியும் கேட்கப்படுவார்கள்.

அப்போது அரசியல் தலைவர்கள் வேறு எங்கோ சென்று இருப்பார்கள். சில கோப்புகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளிக்காமல் வாய்மொழியாக உத்தரவு அளித்திருப்பார்கள். இதனை அரசு ஊழியர்கள் வெகுநாட்கள் கழித்து நிரூபிக்கவும் முடியாது. நிதித்துறை செயலாளர்தான் தேவைக்கு ஏற்ப செலவு செய்வதில் பொறுப்பு உள்ளவர்.

பட்ஜெட்டில் நிதி எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதோ அதற்கு நிதியை செலவு செய்யாவிட்டால் நிதித்துறை செயலாளரே பொறுப்பேற்க வேண்டும். யாரும் சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது. ஒருவரையும் குற்றம் சொல்லி பயனில்லை. அப்படி செய்தால் அவர்கள் அரசு மீது நம்பிக்கையிழப்பார்கள்.

சமூக நலத்துறை அமைச்சர் நிதித்துறை செயலாளர் பற்றி குறை சொல்லக் கூடாது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசிடம் நிதியில்லாதபோது நியாயமானதாக செலவு செய்யவேண்டும். உண்மையில் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்குத்தான் உதவிட வேண்டும். இதனை அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com