விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்

விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என சேலத்தில் நடந்த முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
Published on

சேலம்,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் குணசீலன், அமைப்பு செயலாளர் சற்குணராஜ் மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* மாணவர் நலன் சார்ந்து பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை தாமதப்படுத்தி 21 மாதங்கள் வழங்காமல் இருக்கும் ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.

* நீட் பயிற்சி என்ற பெயரில் முதுகலை ஆசிரியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கற்பித்தல் பணியை செய்ய விடாமல் தடுப்பதும், மாணவர்களின் கற்றல் உரிமையை தடுப்பதும், விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த கட்டாயப்படுத்துவதும் அடிப்படை பணி விதிகளுக்கு முரணானது. எனவே அப்பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்.

* அரசாணை எண் 101 வழியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முதுகலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மிரட்டி விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது. மேலும் அரசாணை 101-ஐ திரும்ப பெற வேண்டும்.

* இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஆசிரியர் இயக்கங்களை ஒன்றிணைத்து நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் சக்திவேல், அமைப்பு செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com