எனது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் முதல்-மந்திரி குமாரசாமிக்கு, விவசாயி கடிதம்

வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளது என்றும், எனது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு, சிக்கமகளூரு விவசாயி கடிதம் எழுதியுள்ளார்.
எனது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் முதல்-மந்திரி குமாரசாமிக்கு, விவசாயி கடிதம்
Published on

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து உள்ளன. முதல்-மந்திரியாக குமாரசாமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியில் நான் முதல்-மந்திரியாக பதவியேற்றால் 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் அனைத்து விதமான கடன்களையும் தள்ளுபடி செய்வேன் என்று குமாரசாமி அறிவித்து இருந்தார்.

ஆனால் அவர் முதல்-மந்திரியாக பதவியேற்றதும் விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய முடியவில்லை. இதனால் அவரை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.48 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்தார். இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கரடகோடு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத். விவசாயி. இவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் பயிர்சாகுபடி செய்வதற்காக, கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.4 லட்சம் வரை அமர்நாத் கடன் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமிக்கு, அவர் எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, முதல்-மந்திரி குமாரசாமி அவர்களுக்கு வணக்கம். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.48 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக நீங்கள் அறிவித்து உள்ளர்கள். நான் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவன். விவசாயம் செய்வதற்காக நான் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் வாங்கி உள்ளேன். வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தும் தகுதி எனக்கு உள்ளது. இதனால் எனது விவசாய கடனை நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டாம்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உரம், யூரியா ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்க நீங்கள் வழி செய்ய வேண்டும். இதனை இந்த கடிதம் வழியாக உங்களிடம் கோரிக்கையாக கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தை படித்து பார்த்து விட்டு முதல்-மந்திரி குமாரசாமி என்ன பதில் அளிப்பார்? என்று அமர்நாத்தும், அப்பகுதியினரும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தப்படி விவசாய கடனை அரசு எப்போது தள்ளுபடி செய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் வேளையில், விவசாயி ஒருவர் தனது விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதி உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com