கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம்; எடியூரப்பாவிடம், மந்திரி எஸ்.டி.சோமசேகர் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வலியுறுத்தி உள்ளதாக மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.
கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம்; எடியூரப்பாவிடம், மந்திரி எஸ்.டி.சோமசேகர் வலியுறுத்தல்
Published on

கருப்பு பூஞ்சை நோய்

மைசூரு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் பலருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு நிலவரம் குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 54 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 5 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

21 நாட்களுக்கு ஊசி

இந்த நோய்க்கான மருந்து போதுமான அளவில் இருப்பு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இது புதிய நோய் அல்ல. பழைய நோய் தான். இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்கள் 21 நாட்களுக்கும் மேலாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும். அவர்களுக்கு ஒருநாளைக்கு ஒரு ஊசி வீதம், 21 நாட்களுக்கு 21 ஊசி போடப்படும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம்

மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மருத்துவ அதிகாரிகள், மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். என்னை பொறுத்தவரையில் வருகிற 7-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் என்பது தான். கடந்த 2 மாதங்களாக ஊரடங்கால் மக்கள் வேலை இன்றியும், வருமானம் இன்றியும் அவதிப்பட்டு வருகிறார்கள்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள். அதற்கு நாம் வாய்ப்பு அளிக்க கூடாது. இதுபற்றி நான் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேசி ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். மேலும் ஊரடங்கை நீட்டிக்காமல் தளர்வுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை

மாநிலத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் 100 சதவீதத்தை முன்கள பணியாளர்கள் எட்டுவார்கள். சரியாக வேலை செய்யாத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இனிமேல் கொரோனா விஷயத்தில் டாக்டர்கள், மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் என யாரும் அலட்சியம் காட்டக்கூடாது. உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com