பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
Published on

மதுரை,

அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. கலெக்டர் வினய் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் விலையில்லா அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் வழங்கப்படும். சமூக இடைவெளியை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 100 கார்டுகள் வீதம் காலை 9 மணி முதல் 12 மணிவரை மற்றும் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணிவரை வழங்கப்படும்.

அனைத்து கடைகளிலும் பொருட்கள் வாங்க வருபவர்களில் முக கவசம் இல்லாதவர்களுக்கு முக கவசம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே பொருட்கள் வழங்கப்படுகிறது.

மார்ச் மாதம் பொருட்கள் வாங்காதவர்கள் ஏப்ரல் மாதத்தில் வாங்கலாம். பொருட்கள் வாங்கினால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துவிடும். பொருட்கள் வாங்காமல் குறுஞ்செய்தி வந்தால் புகார் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் தடையின்றி கிடைக்கும். எனவே மதுரை மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com