காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்

பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்
Published on

ராமநாதபுரம்,

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சுசீலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் இந்த ஆண்டும் மழையின்றி பயிர்கள் கருகிவிட்டதாகவும், எனவே ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி காய்ந்த பயிர்களுடன் வந்து கோஷமிட்டனர்.

மேலும் கடந்த 2017-18-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவது காரணம் சொல்லி விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் நிவாரண தொகை கிடைக்காமல் போய்விடும் என்று கூறி கலெக்டரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பயிர் காப்பீடு நிறுவனத்தில் இருந்து பதிலளிக்க அதிகாரிகள் வராதது கண்டனத்திற்குரியது என்றும், காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க தயாராக உள்ளோம் என்றும் விவசாயிகள் பேசினர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் விவசாயிகளிடம் கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:- பயிர் காப்பீடு நிறுவனத்தினரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை வலியுறுத்தி கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை. ஒரு வருடத்திற்கு பின்பு 25 சதவீத இழப்பீட்டு தொகை தருவதாகவும், மறு கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் கூறுகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். விவசாயிகளின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். சட்ட நடவடிக்கையின் போது மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் உண்மை நிலையை நிச்சயம் தெரிவிக்கும். யாரும் அச்சப்பட வேண்டாம்.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் வெற்றிபெற உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் விடுபட்ட 115 கிராமங்களை சேர்ந்த 886 விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 480 பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com