9-வது வாரமாக தளர்வில்லா முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின; விசைத்தறிகள் ஓடவில்லை

ஈரோடு மாவட்டத்தில் 9-வது வாரமாக நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. விசைத்தறிகள் ஓடவில்லை.
9-வது வாரமாக தளர்வில்லா முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின; விசைத்தறிகள் ஓடவில்லை
Published on

ஈரோடு,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை அமலில் உள்ளது.

எனினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. மேலும் கடந்த மாதம் வந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 9-வது வாரமாக நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், தொழிற்சாலைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், 206 டாஸ்மாக் கடைகள், வ.உ.சி. பூங்கா தற்காலிக காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட், உழவர் சந்தைகள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.

ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டூர் ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோடு, பவானி ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப்ரோடு, சத்திரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், சுவஸ்திக் கார்னர், காளைமாடு சிலை, சென்னிமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களான பாலகம், மருந்தகம், அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டன. முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி, சத்தியமங்கலம் சோதனைச்சாவடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிளும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்துக்குள் வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்கள் அனைத்திலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தளர்வில்லா ஊரடங்கை மீறி ஒரு சிலர் வெளியே சுற்றுவதை காணமுடிந்தது. அவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கையொட்டி பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, பவானிசாகர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com