கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்ட டாக்டர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்ட டாக்டர்கள்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தேசிய டாக்டர்கள் தினமான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த அரசு டாக்டர்கள் கருப்பு உடை அணிந்து வந்து பணி செய்தனர். அவர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை தங்களுக்கு வழங்கக் கோரியும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவ கழகத்தின் விதிகளை காரணம் காட்டி டாக்டர்களை ஆட்குறைப்பு செய்திடும் நடவடிக்கையை கண்டித்தும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான முதுநிலை கவுன்சிலிங்கை நடத்தக்கோரியும் நேற்று கருப்பு உடையணிந்து பணியில் ஈடுபட்டதாக அச்சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்ட போராட்டம்

சில டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கருப்பு உடையணிந்து பணி செய்யும் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் சுதாகர், பொருளாளர் தனபால், அன்பரசு உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் மாநில சங்கத்தின் ஆலோசனைக்கேற்ப அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் கிருஷ்ணாபுரம், காரை அரசு மருத்துவமனைகளிலும் அந்த சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கருப்பு உடையணிந்து பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com