டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா: 2 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச அரிசி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு இலவச அரிசியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா: 2 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச அரிசி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏழை-எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு எதிரே உள்ள திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, 2 ஆயிரம் பேருக்கு இலவச அரிசியை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

சின்னய்யா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏழை-எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். அகில இந்திய அளவில் விளையாட்டுகளை ஊக்குவித்தார். தென்காசியில் ராஜகோபுரம் அமைத்து பெருமை சேர்த்தவர் எங்கள் தெய்வம் சின்னய்யா. ஏழைகளை அரவணைத்த பத்திரிகை உலகின் பிதாமகன். அவரது பிறந்தநாளை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு அரிசி வழங்கி உள்ளோம். அடுத்த ஆண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா, நாள் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராகவும், தளபதி நேசிக்க கூடியவராகவும், கனிமொழி எம்.பி. மிகுந்த மரியாதை கொண்டவராகவும் இருந்தார். அவரது புகழ் என்றென்றும் ஓங்குக. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலசிங், நவீன்குமார், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,

இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், நகர பொறுப்பாளர்கள் திருச்செந்தூர் வாள்சுடலை, ஆத்தூர் முருகப்பெருமாள், சாயர்புரம் அறவாளி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, கணேஷ்குமார் ஆதித்தன், மாணிக்கம் மதன்ராஜ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com