தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கான சூழலை உருவாக்கியதே திராவிட கட்சிகள் தான் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறார்

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கான சூழலை உருவாக்கியதே திராவிட கட்சிகள் தான் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கான சூழலை உருவாக்கியதே திராவிட கட்சிகள் தான் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறார்
Published on

திருச்சி,

தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் இனத்தில் ஆங்கிலேய அரசு தவறுதலாக சேர்த்து 100 ஆண்டுகாலம் அவர்களுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. அந்த தலைக்குனிவில் இருந்து வெளியே வந்தே தீரவேண்டும் என தேவேந்திர குல மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு மாநில அரசும், மத்திய அரசும் உதவி செய்யவேண்டும். சுயமரியாதைக்காக போராடும் தேவேந்திர குல மக்களுக்கு திராவிட கட்சிகள் ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு காணாமல் போவதற்கு எங்களது இந்த நிலைப்பாடு முன்னுதாரணமாக இருக்கும்.

தற்போது சாதியின் அடிப்படையில் யாரும் வேலை செய்வது இல்லை. எல்லோரும் எல்லா தொழிலும் செய்கிறார்கள். அதனால் தான் தேவேந்திர வேளாளர் குலத்தினரை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி மிக பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்கிறோம். இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி சாதிரீதியாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கும் நிலை மாறினால் சமூக மாற்றம் ஏற்படும். ஆணவ கொலைகள், மதமாற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும்.

பாராளுமன்ற தேர்தலில் பட்டியல் இன மக்களை மிக பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக வைத்தே பிரசாரம் செய்வோம். பாரதீய ஜனதாவுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்து இருப்பதாக நானே 3 முறை கவர்னரிடம் புகார் செய்து இருக்கிறேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் வருவதை தற்போது எந்த கட்சியும் விரும்பவில்லை. அதனால் தான் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் கல்வியின் தரம் மிகவும் குறைந்து விட்டது. நீட் தேர்வு கொண்டு வரப்படுவதற்கான சூழலை உருவாக்கியதே திராவிட கட்சிகள் தான். நீட் தேர்வுக்கு தமிழக அரசு சிறப்பு பயிற்சி அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பள்ளி படிப்பின்போதே நன்றாக படிக்க கூடிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தகுதி, திறமையின் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் சீட் வழங்கவேண்டும். நீட் தேர்வை காட்டி திராவிட கட்சிகள் மக்களை பயமுறுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com