டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அரசு சார்பில் அமைக்கப்படுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அரசு சார்பில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அரசு சார்பில் அமைக்கப்படுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீர் நிறைந்த நிலத்தை தூத்து, அதில் துறைமுகத்தையும், குடியிருப்புகளையும் உருவாக்கிய ஊர் தூத்துக்குடி என அழைக்கப்படுகின்றது. கிரேக்கப் பயணி தாலமி தூத்துக்குடியை முத்துக்குளிக்கரை என்றும், ஜேம்ஸ் கர்னல் தோத்துக்கரை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ராமபிரான் சீதாதேவியை தேடுவதற்கு அனுமனை அனுப்பி விட்டு தூத்துக்குடி கடற்பகுதியில் அமர்ந்து மந்திரம் ஜபித்ததால் திருமந்திர நகர் என்று அழைக்கப்படுகின்றது.

1866-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்ட தூத்துக்குடி நகராட்சி தமிழகத்திலுள்ள பழமையான நகராட்சிகளில் ஒன்று. 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் தூத்துக்குடி புதிய மாவட்டமாக உருவானது.


இந்த பகுதி மக்கள் அமைச்சர்களிடமும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடமும் அரசிடம் வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்க இருக்கிறேன்.

அதன்படி, ஏரலை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் (தாலுகா) தோற்றுவிக்கப்படும். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் பெரியசாமிபுரம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதாவிடமும் கோரிக்கை வைத்தார்கள். இதனை அவருடைய அரசு இப்போது நிறைவேற்றி தந்து இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.


மணப்பாடு கடற்கரை பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா, வழிகாட்டி பலகைகள், மீட்பு படகுகள், கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள் வழங்கி அப்பகுதி சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவ கழகம் உரிய அனுமதி வழங்கியதும், மருத்துவ பட்ட மேற்படிப்புகள் தொடங்கப்படும்.


விளாத்திகுளம் வட்டம், பெரியசாமிபுரம் கிராமம் மற்றும் வேம்பார் கிராமத்தில் வேம்பாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும். ஸ்ரீவைகுண்டம் வட்டம், அகரம் குடியிருப்பு அருகே வல்லநாடு கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.

சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சி கிராமத்தில் கருமேனி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், ஆவுடையம்மாள்புரம் கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணை கட்டப்படும்.

கோவில்பட்டி வட்டம், சிதம்பரம்பட்டி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். உடன்குடி, செட்டிக்குறிச்சி, அரசரி கிராமம் மற்றும் தூத்துக்குடி கடற்கரை சாலை ஆகிய 4 இடங்களில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

மணியாச்சி வழியாக வடக்கு நோக்கி செல்லும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்களின் பயண வசதியைத் தூத்துக்குடி நகர மக்கள் பயன்படுத்திடும் வகையில் மீளவிட்டான் முதல் மணியாச்சி வரை ரெயில் பாதையை ஒட்டி வாகனங்கள் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் சசிகலா புஷ்பா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com