குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
Published on

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான தருவைக்குளம் அமைந்து உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்துக்கு தண்ணீர் வரும். பின்னர் குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து, கருமேனி ஆற்றின் வழியாக மணப்பாடு கடலில் சங்கமிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக தருவைக்குளத்துக்கு போதிய அளவு தண்ணீர் வராததால், குலசேகரன்பட்டினம், உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கடும் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் மற்றும் ஊருக்கு நூறு கை திட்டத்தில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கொடி அசைத்து குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்த தூர்வாரும் பணியில், அனைவரும் ஆர்வமுடன் செயல்பட வேண்டும். மழைக்காலத்தில் குளத்தில் தேங்கும் தண்ணீரை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அங்கு குப்பைகளை கொட்டக் கூடாது. குளத்தின் கரையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

தருவைக்குளத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தாசில்தார் தில்லைப்பாண்டி, உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், யூனியன் பொறியாளர் அருணா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பழனீசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை பொம்மையார்புரம் குளம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் செலவில் தூர்வாரப்பட உள்ளது. இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோரம்பள்ளம் ஆறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா கலந்து கொண்டு தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் கண்ணன், உதவி பொறியாளர்கள் பிரியதர்ஷினி, அஸ்வினி, வருவாய் ஆய்வாளர்கள் ராமசந்திரன், பாலசுப்பிரமணியன், பொம்மையாபுரம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகபாண்டியன் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com