டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருடிய வழக்கு: மர்மநபர்களை பிடிக்க தனிப்படை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை உள்ளது.
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருடிய வழக்கு: மர்மநபர்களை பிடிக்க தனிப்படை
Published on

கும்மிடிப்பூண்டி,

கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் இந்த டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

கடையில் ரொக்கப்பணம் எதுவும் இருப்பு இல்லாததால் அவை தப்பியது. மேலும் திருட்டில் ஈடுபடும் போது மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராவை சாக்கு பை போட்டு மூடிவிட்டு துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 3-வது முறையாக தற்போது திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதும், மர்ம நபர்கள் சிலர் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டு உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் முக்கிய தடயங்களை கும்மிடிப்பூண்டி போலீசார் கைப்பற்றிய நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் போலீசார் தினமும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டாலும் இத்தகைய தொடர் திருட்டு நடைபெறுவது போலீசாருக்கு சவாலாகவே உள்ளது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக சந்தேகத்திற்கு இடமான 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்த பலனும் இல்லை.

டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கூண்டோடு பிடிக்க கும்மிடிப்பூண்டி துணை சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com