

சென்னை,
கோடைக்காலம் என்றாலே கொளுத்தி எடுக்கும் வெயிலும், விசுவரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் சென்னை நகரின் தலைவிதி என்றாகி விட்டது. பருவமழை ஏமாற்றியதால் ஏரிகள் வறண்டு போனது. கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை எடுக்கும் நிலையும் அமைந்துபோனது. விவசாய கிணறுகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு போதிய நீர் வழங்கமுடியாத சூழல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருவாரியான பகுதிகளில் வீட்டு குழாய்களும், அடிபம்பு குழாய்களும் வலுக்கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால், தற்போதைய நிலையில் தண்ணீர் லாரிகள் மட்டுமே மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன.