

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பொறியாளர் அறை பக்கத்தில் பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக கடந்த 2011ம் ஆண்டு பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் அது பயன்படுத்தாத நிலையில் பழுதானது என்று கூறி மேலும் பொது நிதியில் இருந்து வீணாக செலவு செய்தனர். ஆனாலும் குடிநீர் எந்திரம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியபடி காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது.
இதனால் அலுவலக பயன்பாட்டுக்கு வெளியில் பணம் கொடுத்து குடங்களில் தண்ணீர் வாங்கப்பட்டு வந்தது. அதே சமயம் ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை நீடித்தது. இதனால் அங்கு வந்து செல்லும் மக்கள் தண்ணீருக்காக அலைந்து தவித்தனர்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ராயப்பாளையத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இலவசமாக தண்ணீர் கொண்டு வர ஆணையாளர் சோனாபாய் புது முயற்சி எடுத்தார்.
அதன்படி தொண்டு நிறுவனத்தினர் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீர் தொட்டியை ஒன்றிய அலுவலகத்தில் நிறுவி, அதில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களின் தாகத்தை தணித்து வருகின்றனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காட்சிப் பொருளாக இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்த இரும்பு ஏணி திடீரென மாயமானது போல, காலப்போக்கில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் மாயமாகி விடும், அல்லது நாளடைவில் எந்திரம் துருப்பிடித்து தடயம் இல்லாமல் போய்விடும் நிலை உருவாகி வருகிறது. தற்போது தொண்டு நிறுவனம் வழங்கி வரும் இலவச குடிநீர் நிரந்தரமாக கிடைக்குமா? என்று ஒன்றிய அலுவலக ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஆணையாளர் சோனாபாயிடம் கேட்டபோது, பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்தால் மீண்டும் பழுதாகாமல் இருக்குமா? அதற்கான செலவு என்ன என்று பொறியாளரிடம் கருத்து கேட்டு, அதை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி தீர்வு காணப்படும் என்றார்.