அரவக்குறிச்சி ஊராட்சியில் ரூ.100 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

அரவக்குறிச்சி ஊராட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடக்க உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
அரவக்குறிச்சி ஊராட்சியில் ரூ.100 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
Published on

க.பரமத்தி,

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அஞ்சூர், மொஞ்சனூர், தென்னிலை (கிழக்கு), கூடலூர் (மேற்கு), கூடலூர்(கிழக்கு), சின்னதாராபுரம், சூடாமணி, தொக்குப்பட்டி உள்பட 15 ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல் என ரூ.7 கோடியே 85 லட்சத்து 950 மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் ரூ.7 கோடியே 85 லட்சத்து 950 மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி 15 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 22 இடங்களில் நடைபெற்றது.

இதில் மொத்தம் ரூ.20 கோடி மதிப்பிலான திட்டங்களை, தமிழக முதல்- அமைச்சர் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களின் அடிப்படையில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், ஆய்வுகள் செய்யப்பட்டு திட்டமதிப்பீடு தயார்செய்ய முதல்-அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் காவிரியில் ரூ.490 கோடியில் கதவணை அமைப்பதற்கும், சின்னதாராபுரம் பகுதியில் அமராவதியில் தடுப்பணை, நங்காஞ்சி- குடகனாறு பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கும், முதல்-அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபு, க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்சரவணன், ஒன்றிய துணை செயலாளர் தென்னிலை சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாதன், செந்தில் உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com