

படப்பை,
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள மேல்படப்பை கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். படப்பை ஊராட்சி தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், ஒரகடம் சிலம்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, ரேஷன் கடைகள், போலீஸ் நிலையம் தேவை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மனுக்களை கொடுத்தனர். இதில் படப்பை கிளை நிர்வாகிகள், இளைஞர்கள் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம், செஞ்சி அகரம், தாராட்சி, தொம்பரம்பேடு, தாமரைகுப்பம் ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கிராம மக்கள் பேசும் போது கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்ட மத்திய அரசு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. சில அதிகாரிகள் கழிவறைகள் கட்டியதாக போலி சான்றிதழ் தயாரித்து பணத்தை சுருட்டி வருகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ரேசன் பொருட்கள் சரிவர வினியோகிப்பதில்லை. குண்டும் குழியுமாக மாறிய சாலைகள் சீரமைக்கப்படவில்லை.
இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்படும் என்று கிராம பொது மக்களிடம் கிரிதரன் உறுதி அளித்தார். ஒன்றிய செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் அபிராமிகுமரவேல், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிகுமார், கிளை செயலாளர்கள் சசிதரன், சண்முகம், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த களாம்பாக்கம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன், மாவட்ட அவை தலைவர் திராவிடபக்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் பொன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திரளான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களை மீண்டும் களாம்பாக்கம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும், குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.