குடிநீர் திருட்டு; இணைப்பு துண்டிப்பு

காணியம்பாக்கம் கிராமத்தில் குடிநீர் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குடிநீர் திருட்டு; இணைப்பு துண்டிப்பு
Published on

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் அனைத்து ஊராட்சிகளிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக கிராமங்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் அடங்கிய பறக்கும்படை குழுவை அமைத்து நீரேற்று நிலையங்கள் முதல் கிராமங்கள் தோறும் குடிநீர் குழாய் செல்லும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து குடிநீர் வடிகால் வாரிய கும்மிடிபூண்டி உதவி நிர்வாக பொறியாளர் அமலதீபன், உதவிபொறியாளர் பாஸ்கரன், இளநிலைப்பொறியாளர் விஜயகுமார், பொன்னேரி தாசில்தார் சுமதி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு ஆகியோர் கொண்ட குழுவினர் வண்ணிப்பாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அருகே உள்ள அனுப்பம்பட்டு மற்றும் 55 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 1-ன் தலைமை நீரேற்றும் நிலையத்தில் உள்ள மின்மோட்டார்களையும் மின்அளவு மற்றும் குடிநீர் வெளியேறும் அளவு எந்தெந்த ஊராட்சிக்கு எவ்வளவு குடிநீர் அனுப்பப்படுகிறது. என்ற விவரங்களை கேட்டறிந்தனர். இதனையடுத்து காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள தரைநிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள நீரை ஆய்வு செய்தனர். அங்கிருந்து வேளுர் கிராமத்திற்கு செல்லும் குழாய்களை ஆய்வு செய்த போது குடிநீர் திருட்டில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டு இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

தொடர்ந்து திருவெள்ளைவாயல் கிராமத்தில் உள்ள தரைநிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டனர். இந்த தொட்டியில் இருந்து எந்த எந்த கிராமங்களுக்கு எவ்வளவு குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் சம்பத், ஊராட்சி செயலாளர்கள் தினேஷ், ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர். அப்போது அவர்கள் கிராம மக்களிடம் குடிநீர் குறித்த குறைகளை கேட்டறிந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com