குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 30 பேர் கைது

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 30 பேர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் காலனியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் இவர்கள் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் தங்களுக்கு குடிநீர் வினியோகிக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கடம்பத்துர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் குடிநீர் பற்றாக்குறையை போக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட நரசிங்கபுரம் காலனியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 7 மணியளவில் தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பூந்தமல்லி- அரக்கோணம் நெடுஞ்சாலையான நரசிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என திரளான பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இரு புறமும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேலாக ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள், சுந்தரவதனம், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன், குணா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டு குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து நகரமாட்டோம் என்று கூறி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களில் ஒரு தரப்பினர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீரை எடுப்பதால் தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது என கூறி அந்த பகுதியில் இருந்த தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு அனைவரையும் அழைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலையில் மரக்கிளைகளை வெட்டிப்போட்டும், குடங்களை வரிசையாக வைத்தும் தங்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com