சிறுவர்களை வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேச்சு

சிறுவர்களை வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் தெரிவித்தார்.
சிறுவர்களை வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேச்சு
Published on

திருச்சி,

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிவுற்ற வழக்கில் உரியவர்களுக்கு தீர்ப்பு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

திருச்சி மாவட்ட தலைமை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குமரகுரு தலைமை தாங்கினார். சார்பு நீதிபதியும் சட்டப்பணிக்குழு செயலாளருமான சந்திரன், சென்னை மாவட்ட நீதிபதி நாசர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சட்டம் படித்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் சட்டம் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் பலருக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு தெரியவில்லை. இந்த முகாம் மூலம் அவர்களும் சட்டம் பற்றிய அறிவை பெறமுடியும்.

வாகன ஓட்டுனர்கள், விபத்தால் ஏற்படும் நஷ்ட ஈட்டை எவ்வாறு பெறுவது?, அதற்கு அவசியமானது என்ன? என்பது குறித்தும் தெரிந்திருப்பது அவசியம் ஆகும். குறிப்பாக சிறுவர்களை இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. முறையான வயதை அடைந்த பின்னர் ஓட்டுனர் உரிமம், மற்றும் டிரைவிங் தெரிந்த பின்னரே பெற்றோர் அவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும்.

நமக்கு உரிய சிறிய உரிமையை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது. சட்ட உதவிக்கு அரசு வக்கீல்களையோ அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழுவினையோ பொதுமக்கள் அணுகினால் அவர்கள் உங்களுக்கு உதவிட தயாராக இருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் ஆவணங்கள் என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, திருமணங்கள், விவாகரத்துகள் போன்றவற்றை முறையாக பதிவு செய்து சான்றிதழ் பெறுவது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பால்தயாபரன், திருச்சி வக்கீல்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com