லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 4,320 மது பாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது

லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 4,320 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 4,320 மது பாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது
Published on

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு போலீசாருக்கு காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் ஒரு லோடு வேனில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை பொறையாறு அருகே அனந்தமங்கலம் மகிமலையாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக ஒரு லோடு வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், வேனில் மீன்கள் இருப்பதாகவும், அவற்றை கும்பகோணத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோடு வேனை திறந்து சோதனை செய்தனர். அப்போது வேனில் கிளீனர் இருக்கையில் இருந்தவர் திடீரென கீழே இறங்கி வயலில் தப்பி ஓடினார்.


இதையடுத்து வேனை சோதனை செய்தபோது முதலில் ஐஸ் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட்டி இருந்தது. அந்த பெட்டியை கீழே இறக்கியவுடன் உள்ளே மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்ட அட்டை பெட்டிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து லோடு வேனை பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வேனில் இருந்த அட்டை பெட்டிகளை இறக்கினர். அப்போது ஒரு அட்டை பெட்டியில் 45 மது பாட்டில்கள் வீதம் 90 அட்டை பெட்டிகளில் 4,320 மது பாட்டில்கள் இருந்தன. மேலும் 2 பாலிதீன் பைகளில் 200 லிட்டர் சாராயம் இருந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் காரைக்கால் மாவட்டம், டி.ஆர்.பட்டினம், நாகவர்ணபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரமணன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் 4,320 மதுபாட்டில்கள், 200 லிட்டர் சாராயம், லோடு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய நெடுங்காடு பகுதியை சேர்ந்த அப்பு என்ற நிர்மல்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com