பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை தொடர் அட்டகாசத்தால் டிரைவர்கள் பீதி

பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்களை மறித்து ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் டிரைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை தொடர் அட்டகாசத்தால் டிரைவர்கள் பீதி
Published on

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்து திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இங்கு வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் தனியாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக இந்த சோதனை சாவடி பகுதியில் ஒற்றை யானை அடிக்கடி சுற்றி வருகிறது. மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை ஒன்றையும், 10 நாட்களுக்கு முன்பு போலீஸ் சோதனை சாவடியையும் அந்த ஒற்றை யானை இடித்து தள்ளி அட்டகாசம் செய்தது. அதுமட்டுமின்றி அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து நடுரோட்டிலேயே நின்று விடுகிறது. இதனால் வாகனங்களை மேற்கொண்டு இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சோதனை சாவடி பகுதிக்கு ஒற்றை யானை வழக்கம்போல் வந்தது. பின்னர் அங்குள்ள ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது.

ரோட்டை மறித்து யானை நடமாடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்படியே நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மணி நேரத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின.

இதுகுறித்து அந்த பகுதியில் கடை வைத்து உள்ளவர்கள் கூறுகையில், யானை சோதனை சாவடி பகுதிக்கு தொடர்ந்து வந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் இரவில் நாங்கள் நிம்மதியாக கடையில் தூங்க முடியவில்லை. எனவே ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com