கூத்தாநல்லூர் பகுதிகளில் வறட்சி, குடிதண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்

கூத்தாநல்லூர் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் குடிதண்ணீரை தேடி கால்நடைகள் அலையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் பகுதிகளில் வறட்சி, குடிதண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்
Published on

கூத்தாநல்லூர்,

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 2 வாரங்கள் கரையை தொட்ட அளவிலேயே தண்ணீர் சென்றது.

என்றாலும் பெரும்பாலான ஆறுகள், குளங்கள், குட்டைகள், நீர் தேக்க இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் கோடை மழை கூட எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

இதனால் தற்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, பழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், குட்டைகள், நீர்தேக்கங்களில் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

பருத்தி சாகுபடிக்கும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க ஆடு, மாடுகள் கூட குடிதண்ணீர் கிடைக்காமல் அலைய கூட சூழ்நிலை நிலவுகிறது.

ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு இருப்பதால் குடிநீர் குழாய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கால்நடைகள் அதில் வரும் தண்ணீரை குடித்து தாகத்தை தணிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com