வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி

வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.
வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி
Published on

பெலகாவி,

பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் மாவட்ட அதிகாரிகளுடன் வறட்சி குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, வனத்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:-

தடுப்பணைகள் கட்டுவது, கிராம குடிநீர் திட்டங்களை அமல்படுத்துவது, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்த திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றின் மூலம் வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தேவையான நிதியை மாநில அரசு விடுவித்தது. அதனால் டேங்கர் லாரிகளுக்கு உடனடியாக வாடகை கட்டணத்தை வழங்க வேண்டும்.

அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரில் சென்று குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெலகாவியில் தேவைக்கு ஏற்ப கோசாலைகளை திறக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 28 தீவன வங்கிகள் செயல்படுகின்றன.

தேவையான அளவுக்கு நிதி இருப்பு உள்ளதால், பருவமழையால் சேதமடையும் பயிர்களுக்கு 7 நாட்களுக்குள் நிவாரண நிதி வழங்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகள் பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வறட்சி பாதித்த பகுதிகளில் நான் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் தினமும் தலா 40 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் 2,999 கிராமங்களுக்கு 2,300 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கர்நாடகத்தில் கடந்த 18 ஆண்டுகளில், 14 ஆண்டுகள் வறட்சி இருந்துள்ளது.

இந்த வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். கிருஷ்ணா நதி படுகையில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க, மராட்டிய மாநில அரசு அளித்த வாக்குறுதிப்படி நீரை திறந்துவிட வேண்டும். இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com