

தேனி,
மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-
மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி மதுவிற்பனை செய்பவர்கள் மீது வரும் புகார்களின் பேரிலும், போலீசார் நடத்தும் ரோந்துகளின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், மாவட்டம் முழுவதும் போலீஸ் துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு, குடும்ப வன்முறை தடுப்பு, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு வார காலத்தில் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தும் பணி தொடங்க உள்ளது.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் போலீசார் நேரில் சென்று பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். கஞ்சா, மது பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சிறுவர்களை சீரழிக்கும் வகையில் உருவாகி வரும் நூதன போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. குடும்ப வன்முறைகளால் கொலை, தற்கொலை சம்பவங்கள் நடப்பதால் இதுகுறித்த விழிப்புணர்வு கருத்துக்களும் எடுத்துக் கூறப்படும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் இந்த விழிப்புணர்வு கூட்டங்களில் தற்கொலை தடுப்பு, தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுதல், தற்கொலையால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பரிதவிப்புகள் போன்றவை குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.