குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

ஊத்துக்குளி அருகே குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் சமரசம் பேசி அவரை கீழே இறங்க வைத்தனர்.
குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது வேகமாக மேலே ஏறினார். பின்னர் செல்போன் கோபுரத்தின் மீது நின்று கொண்டு உரத்த குரலில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக சத்தம் போட்டார்.

இவரது சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். பொதுமக்களில் பலர் கீழே குதித்து விடாதே என்று சத்தம் போட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஊத்துக்குளி போலீசாரும், பெருந்துறை தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வாலிபர் குன்னத்தூர் அருகே உள்ள சுக்காகவுண்டன்புதூரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சுரேஷ்(வயது 35) என்பதும், கூனம்பட்டியை சேர்ந்த நண்பர் தன்னிடம் இருந்து ரூ.850, 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறித்து விட்டதாகவும் அதை மீட்டு தர கோரி தான் செல்போன் கோபுரத்தில் ஏறியதாகவும் கூறினார்.

அது மட்டுமின்றி சுக்காகவுண்டன்புதூருக்கு தார்சாலை அமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும். அங்குள்ள தொடக்க பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.

இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி மாலை 3.30 மணிக்கு அந்த வாலிபரை கீழே இறங்க வைத்தனர். அதன் பிறகு போலீசார் அந்த வாலிபரை விசாரணைக்காக ஊத்துக்குளி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாலிபர் ஏற்கனவே 4 முறை செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com