மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க டி.டி.வி.தினகரன் முயற்சி

மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க டி.டி.வி. தினகரன் முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க டி.டி.வி.தினகரன் முயற்சி
Published on

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மூஞ்சிக்கல் பஸ் நிலையம் பகுதியில் நடந்தது. இதற்கு நகர செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளை வழங்கி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முழு பெரும்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள டி.டி.வி.தினகரன், மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து வருகிறார். அவருடைய முயற்சி வெற்றி பெறாது.

எங்களுக்கு 2 ஆயிரத்து 132 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் உரிய ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளோம். எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இன்னும் 50 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், சண்முகசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் எட்வர்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பழனியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராஜாத்தியம்மாள், கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு சிறை தண்டனை கிடைப்பது உறுதி. அ.தி.மு.க. தலைமையிலான அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளையும், ஊழல் புகார்களையும் தெரிவித்து வருகிறார். ஆனால் மக்களுக்கு தெரியும். அவரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று. திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றும், உயிர்பலி இல்லை என்றும் தான் நான் கூறியிருந்தேன். ஆனால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என நான் கூறவில்லை. இதனை புரிந்து கொள்ளாமல் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, எனது பதவியை ராஜினாமா? செய்யச்சொல்லி பிரசாரம் செய்வது வேடிக்கையாக உள்ளது.

நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எங்களை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் உரிய கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்தார். இதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com