5 மாதங்களாக குடிநீர் கிடைக்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆரணி அருகே 5 மாதமாக குடிநீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 மாதங்களாக குடிநீர் கிடைக்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

ஆரணி,

ஆரணி அருகே செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் முனுகப்பட்டு கிராமம் உள்ளது. இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு கடந்த 5 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால்பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். தொலைதூரம் சென்று பெண்கள் குடிநீர் எடுத்து வரும் நிலைமை ஏற்பட்டது. எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுத்தனர்.

ஆனால் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 9 மணியளவில் அந்த கிராமத்தை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆரணி-செய்யாறு சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறைபிடித்தனர். அதில் வந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகினர். காலாண்டு தேர்வு நடைபெறுவதால் நாங்கள் தேர்வு எழுத செல்ல வேண்டும். பஸ் செல்ல அனுமதியுங்கள் என மன்றாடி கேட்டனர். அப்போது தனியார் பஸ்களும் அங்கு வந்தன. அந்த பஸ்களில் அவர்களை ஏற்றி அனுப்பினர். ஆனால் அரசு பஸ்சை விட மறுத்தனர்.

கார், இரு சக்கர வாகனங்களில் காத்திருந்தவர்கள் மாற்றுப்பாதை வழியாக சென்றனர். தொடர்ந்து மறியல் நீடித்ததால் பெரணமல்லூர் போலீசார் அங்கு வந்து அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். அங்கு செய்யாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி தலைவர் எல்லம்மாள் தேவராஜன் ஆகியோரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊர் வழியாக செய்யாறு ஓடுகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மணல் கடத்தல் நடக்கிறது. அதனை தடுக்கவும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மணலுக்காக ஆறு தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்று ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதே ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து வாழைப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் ஊருக்கு ஏன் குடிநீர் வழங்க மறுக்கிறீர்கள்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் உங்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் மதியம் 1 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சிறைபிடித்த பஸ்சை விடுவித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த வழியாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com