பலத்த மழை காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது - போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

பலத்த மழை காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
பலத்த மழை காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது - போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
Published on

தளி,

உடுமலையில் இருந்து மூணாறுக்கு சென்று வருவதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அத்துடன் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் உடுமலை வழியாக மூணாறுக்கு செல்வதற்காக ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இது தவிர அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக நாள்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அத்துடன் மலைவாழ் குடியிருப்புகளில் வசித்து வருகின்ற மலை வாழ் மக்கள் சமவெளிப்பகுதிக்கு வந்து செல்வதற்காக உடுமலை-மூணாறு சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக நேற்று முன்தினம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மூணாறு மற்றும் மறையூர் பகுதிகளில் உள்ள நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மறையூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கியது.

மேலும் உடுமலை - மூணாறு பிரதான சாலையில் மறையூருக்கும் மூணாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரியவாறை தரைமட்ட பாலம் வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது. இதனால் உடுமலையில் இருந்து மூணாறுக்கு சென்ற வாகனங்கள் மறையூருடன் நிறுத்தப்பட்டது. அதேபோன்று மூணாறில் இருந்து உடுமலைக்கு வரவேண்டிய வாகனங்கள் மூணாறு எல்லையில் நிறுத்தப்பட்டதால் வாகனபோக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதனால் தமிழக, கேரளா மாநில பொதுமக்களும் போக்குவரத்து வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இந்த சூழலில் மழையின் தாக்கம் குறைந்ததால் நேற்று மாலையில் இருந்து மறையூர் பகுதியில் மின்வினியோகம் சீரானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் உடுமலை-மூணாறு சாலையில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்தை விரைந்து சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com