ஓமியோபதி தின நிகழ்ச்சியின்போது நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பிய ஊழியரால் பரபரப்பு

உலக ஓமியோபதி தின நிகழ்ச்சி புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று அரசு ஆஸ்பத்திரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
ஓமியோபதி தின நிகழ்ச்சியின்போது நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பிய ஊழியரால் பரபரப்பு
Published on

புதுச்சேரி,

நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். ஓமியோபதி தலைமை மருத்துவர் பாலாஜி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஹனிமோனின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசிவிட்டு அமர்ந்ததும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் யோகா பயிற்சியாளர் ஞானவேலு எழுந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று அறிவித்தீர்கள்? ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பயிற்சியாளரை இருக்கையில் அமருமாறு எச்சரித்தார். அதன்பின்தான் அவர் அமர்ந்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது.

புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு சென்று அலோபதி மருத்துவத்தில் உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்து நலம்பெற செய்கின்றனர். ஆனால் ஓமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்போதும் நலமுடன் இருக்க செய்கின்றனர். இதனால்தான் உலகில் உள்ள மக்களில் 200 கோடி பேர் ஒமியோபதி மருத்துவத்தை மேற்கொள்கின்றனர். அலோபதியில் உடனடியாக நோய்கள் குணமடையும். ஆனால் ஓமியோபதியில் தாமதமாக குணமடைந்தாலும் முழுமையாக நோய்கள் குணமாகும். புதுவையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனையை வேறுமாநிலத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்தபோது நான்தான் தடுத்து நிறுத்தினேன்.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் என்பது குறிப்பிட்ட காலத்திற்கானதுதான். திட்டம் முடிந்ததும் அதில் பணியாற்றியவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியதுதான். ஆனால் நாங்கள் அப்படி செய்யாமல் அரசுத்துறையில் பணி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற பேச்சுகளால் அதை செய்ய வேண்டுமா? என்ற கேள்விகள் எழும்.

தேசிய கிராமப்புற சுகாதார ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோப்பு தயார் செய்துள்ளார். அதுதொடர்பாக அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.

வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த மருத்துவர்களுக்கான சம்பளத்தில் உள்ள குழப்பங்கள் சரிசெய்து தரப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com