சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெண் போலீசார் ஸ்கூட்டரில் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு வார விழாவின் தொடக்கமாக பெண் போலீசார் ஸ்கூட்டரில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். இதனை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெண் போலீசார் ஸ்கூட்டரில் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
Published on

திருப்பத்தூர்,

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படுவதோடு, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி திருப்பத்தூர் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு வார தொடக்கத்தையொட்டி நேற்று பெண் போலீசார் மற்றும் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற்ற பெண்கள் கலந்து கொண்டு ஸ்கூட்டர்களில் அணிவகுத்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதனை கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணி, கிருஷ்ணகிரி மெயின்ரோடு வழியாக சென்று தூயநெஞ்சக்கல்லூரி முன் நிறைவடைந்தது. பேரணியின்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரோஜாப்பூவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், நல்லதம்பி எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேலு, பாலகிருஷ்ணன், கலெக்டர் அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ராம்சேகர், உதவிப் பொறியாளர் செல்வராஜ் உள்பட போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலர் நேர்முக உதவியாளர் ஜாகிர்கான் நன்றி கூறினார்.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் தனது வீட்டிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com