சூரிய கிரகணத்தையொட்டி குமரி கோவில்களில் நடை அடைப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன

சூரிய கிரகணத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
சூரிய கிரகணத்தையொட்டி குமரி கோவில்களில் நடை அடைப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன
Published on

கன்னியாகுமரி,

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வரும் போது, சூரியன் மறைக்கப்பட்டு, சந்திரனின் நிழல் பூமியில் விழும். இதை சூரிய கிரகணம் என்கிறோம்.இந்த அபூர்வ சூரிய கிரகணம் நேற்று ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். வானில் மேக மூட்டம் இல்லாததால் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது.

சூரிய கிரகணத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று நடை அடைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தன.

தாணுமாலயசாமி கோவில்

முக்கியமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் நடை வழக்கம் போல அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு கொன்றையடி சன்னதியில் அபிஷேகம் மற்றும் மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், பூஜைகள் முடிக்கப்பட்டு காலை 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதே போல கன்னியாகுமரி பகவதி அம்மன் காவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு 12 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன.

வெங்கடாசலபதி கோவில்

அதே சமயத்தில், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் காலையில் நடை திறக்கப்படவே இல்லை. ஆனால் வெங்கடாசலபதி கோவிலில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாலையில் வழக்கம்போல கோவில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com