அம்மன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு 70 பேர் வாந்தி, மயக்கம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதாணி எம்.எல்.ஏ., கலெக்டர் நேரில் ஆறுதல்

ஹலகூர் அருகே, மாரம்மா அம்மன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட 70 பேரை அன்னதாணி எம்.எல்.ஏ.வும், மாவட்ட கலெக்டரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அம்மன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு 70 பேர் வாந்தி, மயக்கம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதாணி எம்.எல்.ஏ., கலெக்டர் நேரில் ஆறுதல்
Published on

ஹலகூர்,

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே அமைந்துள்ளது லிங்கப்பட்டணா கிராமம். இந்த கிராமத்தில் மாரம்மா அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் ஹலகூரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உடல்நிலை மோசமடைந்த சிலர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மண்டியா மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பிரசாதமே விஷமாக மாறியதால்தான் 70 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசாதம் தயாரித்த சமையல்காரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மலவள்ளி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகருமான அன்னதாணி லிங்கப்பட்டணா கிராமத்துக்கு வந்தார். அவர் அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் மாரம்மா கோவிலில் அரசின் தடை உத்தரவை மீறியுள்ளனர். அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இது வருத்தம் அளிக்கிறது. இதுவரை 70 பேர் மட்டுமே பிரசாதம் சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் யாரும் பயப்பட தேவையில்லை.

இருப்பினும் மக்கள் யாரும் கொரோனா தடுப்பு விதிகளை மீற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு அறிவித்துள்ள அனைத்து விதிகளையும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் நலமோடு வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வந்தார். அவர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள மக்களிடம் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com