தொடர் கனமழை எதிரொலி: பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழையால் பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலி: பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Published on

குடகு,

தொடர் கனமழையால் பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே தென்மேற்கு பருவமழை கர்நாடக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, கார்வார், உடுப்பி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை குடகு மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மடிகேரி, சித்தாப்புரா, பாகமண்டலா, தலைக்காவிரி ஆகிய பகுதிகளில் மழை புரட்டி யெடுத்தது.

இந்த தொடர் கனமழையால் மடிகேரி, பாகமண்டலா, சித்தாப்புரா பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பாகமண்டலா காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பங்கண்டேஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இந்த வெள்ள நீர், கரையோரத்தில் உள்ள சில வீடுகளை சூழ்ந்த படி செல்கிறது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய பீதியில் உள்ளனர்.

நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு சனிவாரசந்தே, மடிகேரி, விராஜ்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தார்கள். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகும் நிலையில், கனமழையால் மாணவ -மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்ட னர். மேலும் சோமவார் பேட்டை தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையால் ஹாரங்கி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இந்த கனமழை பாதிப்பு குறித்து குடகு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் குடகில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் பாகமண்டலா, மூர்நாடு, பேஸ்திரி, சித்தாப்புரா, கரடிகோடு ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன்.

மேலும் பல கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பல இடங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பொறுத்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகாரிகள் விடுமுறை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com