பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: புறவழிச்சாலையில் வேகத்தடை- வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டன

பெரம்பலூரில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக புற வழிச்சாலையில் வேகத்தடை- வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: புறவழிச்சாலையில் வேகத்தடை- வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டன
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் எளம்பலூர் புறவழிச்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதில் எளம்பலூர் ஊராட்சியின் சுற்றுச்சாலை- புறவழிச்சாலையுடன் சந்திக்கும் இடத்தில் 5 சாலைகள் உள்ளன. ஒன்று திருச்சி- சென்னை 4 வழிச்சாலையில் இருந்து ஆத்தூர்-பெரம்பலூர் பிரதான சாலையை இணைக் கும் சாலை, எளம்பலூரில் இருந்து புறவழிச்சாலையை வந்தடையும் சாலை, பெரம்பலூரில் இருந்து சென்று வருவோர் எளம்பலூர் ஊருக்குள் செல்லாமல் ஊரை சுற்றி புறவழிச்சாலையை அடையும் சாலை, தேசியநெடுஞ்சாலையில் இந்திராநகரில் இருந்து சுற்றுச்சாலையை அடையும் சர்வீஸ் சாலை ஆகியவை என மொத்தம் 5 சாலைகள் ஒரே இடத்தில் சந்திக்கின்றன.

இதில் சுற்றுவட்ட சாலையில் இருந்து 5 சாலை வழியாக இந்திராநகரை அடையும் சர்வீஸ் சாலையில் வேகத்தடைகள் இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக வந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. சமீபத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த பிரம்மதேசத்தை சேர்ந்த மாணவர் தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ்சில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல உடல் உறுப்புகள் ஊனம் அடையும் வகையில் இதுவரை சுமார் 25-க்கும் மேற்பட்ட விபத்துகள் அப்பகுதியில் நடந்துள்ளன. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அங்கு சாலைகளில் வேகத்தடைகள்-வேக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கையானது செய்தியாக தினத்தந்தியின் நகர்வலம் பகுதியிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 26-ந்தேதி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனியார் கல்வி நிறுவன பஸ்சில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையறிந்த பொதுமக்கள் விபத்து நடந்த 5 சாலையில் வேகத்தடைகள்-தடுப்புகள் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் எதிரொலியாக, எளம்பலூர் 5 சாலை சந்திப்பில் 5 வேகத்தடைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. மேலும் இந்திரா நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலைக்கு வரும் வாகனங்களின் வேகத்தையும், ஆத்தூர், துறையூர் மார்க்கத்தில் இருந்து இந்திராநகர் வழியாக சென்னை, கடலூர் சென்றடையும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடுப்புகள் வைக்கப்பட்டு மேற்கு பகுதியில் ஒரு பக்கம் சாலை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.

வேகத்தடைகள்-வேகத்தடுப்புகளை முன்பே அமைத்திருந்தால் 3 உயிர்கள் இழப்பை தடுத்திருக்க முடியும். நியாயமாக செய்யவேண்டிய அடிப்படை பணிகளை பொதுமக்கள் போராடியும் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com