‘புரெவி’ புயல் எதிரொலி: மாவட்டத்தில் மிதமான மழை

‘புரெவி’ புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.
‘புரெவி’ புயல் எதிரொலி: மாவட்டத்தில் மிதமான மழை
Published on

புதுக்கோட்டை,

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, நாளை (வெள்ளிக்கிழமை) தென்தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணிக்கு மேல் லேசாக மழை தூற தொடங்கியது. தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல தூறலின் வேகம் சற்று அதிகரித்தது. இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் பலர் மழையில் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்த படியும் சென்றனர். இதேபோல சாலையில் நடந்து சென்றவர்களின் நிலையும் இது தான்.

சராசரி மழை கூட பெய்யவில்லை

பகல் 12 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. அதன்பின் தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே நிவர் புயலின் போது பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் மழை பெய்யவில்லை. மிதமாக மட்டுமே பெய்தது. இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக மழை அதிகமாக பெய்யக்கூடுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போதுமான மழை இல்லாததால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. இதேபோல சில இடங்களில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை கூட மாவட்டத்தில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டைப்பட்டினம்-மணமேல்குடி

கடலோரப் பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. புயல் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது. மணமேல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

கறம்பக்குடி

கறம்பக்குடியில் நேற்று காலை தொடங்கி மாலைவரை சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பயணிகள் கூட்டம் இல்லாததால் கறம்பக்குடி பகுதியில் இயக்கப்படும் சில தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. விட்டு, விட்டு பெய்த மழையால் நேற்றைய வாரச்சந்தை பாதிக்கப்பட்டது. கோழிகளை விற்க விவசாயிகள் வந்திருந்தபோதும் அதை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் திரும்பி சென்றனர். இதேபோல் சந்தைக்கு வந்திருந்த தரைக்கடை வியாபாரிகளும் கடை போட முடியாததால் பாதிக்கப்பட்டனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல நேரங்களில் காற்றும் வீசியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com