‘புரெவி’ புயல் எதிரொலி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை

‘புரெவி‘ புயல் எச்சரிக்கை எதிரொலியால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தும் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘புரெவி’ புயல் எதிரொலி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை
Published on

கன்னியாகுமரி,

வங்க கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) காலையில் குமரி கடல் பகுதிக்கு வருகிறது. நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், குமரிக்கும் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும் புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, புயல் அபாயம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வர வேண்டாம் என்று சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகளும் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நேற்று மாலை முதல் ஓட்டல்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. இதனால் சாலைகள், கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே சமயத்தில், கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கடற்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ளதா? என போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

படகு போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கையால் கன்னியாகுமரி கடலில் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று காலையில் திடீரென நிறுத்தப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் 5 படகுகளும் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com