முதுமலை புலிகள் காப்பகம் திறக்காததால் சூழல் சுற்றுலா திட்ட டிரைவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு; உடனடியாக திறக்க கோரிக்கை

முதுமலை புலிகள் காப்பகத்தை திறப்பதில் தாமதமாகி வருவதால் சூழல் சுற்றுலா திட்ட டிரைவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மசினகுடியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட அலுவலகம் மூடி கிடப்பதை படத்தில் காணலாம்.
மசினகுடியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட அலுவலகம் மூடி கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

முதுமலையை திறப்பதில் தாமதம்

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டது. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

அவர்கள் முதுமலைக்கும் வருகிறார்கள். ஆனால் புலிகள் காப்பகம் திறக்கப்படாததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு

முதுமலை வனத்துறை சார்பில் மசினகுடி பகுதியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட அலுவலகத்தின் கீழ் வாகன சவாரி நடைபெற்று வந்தது. இங்கு 300 டிரைவர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனா காரணமாக காப்பகம் திறக்கப்படாததால், வாகன சவாரி செல்வது இல்லை.

இந்த சவாரி மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை கவனிக்கக்கூடிய நிலை இருந்தது. தற்போது வாகன சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், டிரைவர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சூழல் சுற்றுலா திட்ட வாகன சவாரி டிரைவர்கள் கூறியதாவது:-

அதிகாரிகள் நடவடிக்கை

மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படவில்லை. இதனால் வனத்துறை கீழ் செயல்பட்டு வரும் சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட அலுவலகமும் மூடப்பட்டு இருக்கிறது.

இதனால் சூழல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமும் நடைபெறாமல் உள்ளதால் வாகன சவாரி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வாழ்வாதாரமும் தொடர்ந்து பாதித்து வருகிறது. எனவே சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

திறக்க வேண்டும்

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு என்று தனி மவுசு உண்டு. இங்கு வனவிலங்குகளை அதிகம் பார்க்க முடியும் என்பதால் ஏராளமானோர் வருகிறார்கள்.

தற்போது காப்பகம் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். எனவே வனத்துறை அதிகாரிகள் தாமதிக்காமல் திறக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com