

ராசிபுரம்,
ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் ரமேஷ் அமல்ராஜ் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் ஆர்.வி.மகாலிங்கம், ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வக்கீல் சுரேஷ் குமார், நகர அவைத்தலைவர் வி.கேஆர்.கே.ராமசாமி, பொருளாளர் கோபால், துணை செயலாளர் மனோகரன், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், நகர மாணவர் அணி செயலாளர் ஆர்.பி.எம்.ஜெகன் தலைமைக் கழக பேச்சாளர் ஏ.வி.சி.கோபி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கப்பணம் ரூ.1000-ஐ பொங்கல் பரிசு தொகையாக வழங்கியதன் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரதமர் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உதவித்தொகைகள் அவரவர் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும். உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கப்படுவதால் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ராசிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ராசிபுரத்திற்கு என தனியாக புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் அனைத்து சாலைகளும் ரூ.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து தேர்வு எழுதும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராசிபுரத்தில் அரசு தேர்வுக்காக பயிற்சி மையம் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.
கூட்டத்தில் நகர வங்கி துணைத்தலைவர் வெங்கடாசலம், சூப்பர் பட்டு சங்க துணைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சீரங்கன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கலைவாணி, மாவட்ட துணைத்தலைவர் ராதா சந்திரசேகர், நகர மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 10-வது வார்டு செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.