பொதுக்குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை

பொதுக்குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுக்குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
Published on

உளுந்தூர்பேட்டை,

ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம், தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், சாலை மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

ஊரக பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீர் பிரச்சினைகள் பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திடவும், குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் மின்மோட்டார் பழுது, குழாய் உடைப்பு, நீர்மட்டம் கீழே செல்வது, மின் இணைப்புகள் பழுது போன்றவற்றின் விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து பழுது நீக்கம் செய்ய வேண்டும். அனைவருக்கும் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டியுள்ளதால், தனி நபர்கள் எவரேனும் மின்மோட்டார் பொருத்தி பொதுக்குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுதல், தோட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார்.

மேலும் ஊரக பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையை உருவாக்குவது, கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதிவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com