போச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு சாலைமறியல்

போச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு முதியவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு சாலைமறியல்
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முதியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

அதன்படி போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி பாலேதோட்டத்தில் கொடமாண்டப்பட்டி - போச்சம்பள்ளி செல்லும் சாலையில் நேற்று முதியவர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வெகு நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com