தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2-ம் கட்டமாக நடந்து முடிந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட கவுன்சிலர், 76 ஒன்றிய கவுன்சிலர், 121 கிராம ஊராட்சி தலைவர், 1,032 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 1,237 பதவியிடங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில், ஏற்கனவே பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு கிராம ஊராட்சி தலைவரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சி தலைவரும் என மொத்தம் 5 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 பேரும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 80 பேரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 54 பேரும் என மொத்தம் 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதையடுத்து 1,014 பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 8 வார்டுகளில், தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1 வார்டிலும் வெற்றி பெற்றது. இதில் 1-வது வார்டு பாஸ்கர் (தி.மு.க.), 2-வது வார்டு மகாதேவி (தி.மு.க.), 3-வது வார்டு முத்தமிழ்செல்வி (தி.மு.க.), 4-வது வார்டு கருணாநிதி (தி.மு.க.), 5-வது வார்டு குன்னம் ராஜேந்திரன் (தி.மு.க), 6-வது வார்டு தேவகி (அ.தி.மு.க.), 7-வது வார்டு சோ.மதியழகன் (தி.மு.க.), 8-வது வார்டு அருள்செல்வி (தி.மு.க.) ஆகியோர் மாவட்ட கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதேபோல் 76 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 42 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 28 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நேற்று பதவியேற்று கொண்டனர்.

வெற்றி பெற்ற 8 மாவட்ட கவுன்சிலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் முன்னிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதாவும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் ஊரக வளர்ச்சி துறையின் உதவி திட்ட அலுவலர் (வீடு-சுகாதாரம்) நாகரத்தினமும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலக செயலாளர் உமா மகேஷ்வரி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரனும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

புதிதாக பதவியேற்ற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோருக்கு, அவர்களின் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி தலைவர் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com